மருத்துவ முதுநிலை நீட் தேர்வில் மோசடி, கோவை டாக்டரிடம் விசாரணை…

கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் மருத்துவ படிப்பில் முதுநிலை மேற்படிப்புக்காகநீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அதற்காக அவர் மதுரையில் தங்கி இருப்பதாக கூறி 2 முகவரிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு முகவரியும் கொடுத்து 3 இடத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். மேலும் அவர் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரிவதாகவும் ஆவணங்களை அதில் இணைத்து இருந்தார். தொடர்ந்து அவர் கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதினார். அதில் மருத்துவ மேற்படிப்புக்கு தகுதியான மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்துஅவர் புனைவில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.டி. படிப்பதற்காக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தையும் செலுத்தினார். அதன் பின்னர் அவர் மேற்படிப்புக்கு சேரவில்லை. இந்த நிலையில் அவர் விண்ணப்பித்திருந்த ஆவணங்களை மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்த போது அவர் போலியான முகவரி மற்றும் ஆவணங்களை தயாரித்து தேர்வு எழுத தாக்கல் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை உளவுப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோவை உளவுத்துறை போலீசார் அந்த டாக்டர் தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.