6, 9, 11ம் வகுப்புகளுக்கான தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் சேரலாம்.!!

புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இணையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய கிரெடிட் கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்காக ஆதார் போன்று அபார் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் ஆரம்ப படிப்பில் இருந்து உயர்கல்வி வரையிலும் எப்படியெல்லாம் படித்து வந்தனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், தேசிய கிரெடிட் கட்டமைப்பு வரும் 2024-25ம் கல்வியாண்டு முதல் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை https://forms.gle/5AB2iuxa1k62r2E3A என்ற லிங்க் மூலம் தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ சார்பில் பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.