படிப்பை பாதியில் நிறுத்தினால் முழு கட்டணமும் வாபஸ்..? – கல்லூரிகளுக்கு யூஜிசி புதிய உத்தரவு!

தற்போது கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர்கள் பலர் சேர்ந்துள்ள நிலையில் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பலரும் பல்வேறு கல்லூரி, பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் ஜெ.இ.இ மெயின் மற்றும் ஜெ.இ.இ உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகளை எழுதியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக சில கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களிலும் அட்மிசன் செய்து வைத்துள்ளனர். அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தால் கல்லூரி படிப்பை ரத்து செய்து வெளியேறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் அவ்வாறு சேர்க்கையை ரத்து செய்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் அவர்கள் செலுத்திய முழு கல்விக் கட்டணத்தையும் திரும்ப அளிக்க வேண்டும். சேர்க்கையை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என யூஜிசி தெரிவித்துள்ளது.