கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை சார்ந்த ஆய்வு பணிகள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பவன் குமார்,போலீஸ் கமிஷனர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- கோவையில் போதை பொருட்கள் விநியோகத்திற்கு சாதகமான சூழல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அடுத்த தலைமுறையினரை காப்பாற்ற வேண்டும் என்பது முதலமைச்சர் லட்சியமாகும். அதன் அடிப்படையில் கோவையில் எந்த விதமான போதை பொருட்களும் கிடைக்கக்கூடாது என்ற வகையில் பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகின்றன .போதை மருந்துகள் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் , பஸ் – ரயில் நிலையங்கள் பெட்டிக்கடைகள் மருந்து கடைகள் அருகே தொடர் சோதனை மேற்கொள்ள வேண்டும். சோதனை சாவடிகளில் தீவிர தணிக்கை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்புக்களை போலீசார் அதிகப்படுத்த வேண்டும். அதில் போதை பொருட்களால் உடல் மன நல பாதிப்புகள் மற்றும் சற்று ரீதியான விளைவுகள் குறித்து விரிவாக எடுத்து கூற வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கைது மற்றும் பறிமுதல் மட்டும் இன்றி மூல விநியோக வலையமைப்புகளை அளித்தல், நிதி ஆதாரங்களை முடக்குதல் , தொழில்நுட்ப கண்காணிப்பை வலுப்படுத்தல் குற்றவாளிகளை கண்காணித்தல் ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும். கோவையில் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து துறையினரும்ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பொள்ளாச்சி சப் கலெக்டர் ராமகிருஷ்ணன் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டாஸ்மாக் மிகப்பெரிய துறை. இந்த துறையில் நிறைய கற்று வருகிறேன். திடீரென ஆய்வு என்ற பெயரில் ஒரு இடத்திற்கு புகைப்படம் ,வீடியோவுக்காக போய் நிற்க மாட்டேன் .,நான் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்க வேண்டும். தவறு நடைபெறுகிறதா? இல்லையா? என தெரிந்து சட்டப்படிதான் அணுக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.






