சாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை என்று கூறிய ராஜ்மோகன், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங் கற்று தரப்படும். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். நமது மாணவர்கள் சாய் ஜிபிடி, ஜெமினி போன்ற செயலிகளின் பயனாளர்களாக மட்டுமே இருக்க கூடாது.
அவர்கள் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் வாய்ந்தவர்களாக மாற வேண்டும். இதற்காக தற்போது புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கே டிரெய்னிங் முறையில் பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் மனநலனை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு பொறுப்பு. மெல்ல கற்கும் மாணவர்களை ஒதுக்காமல், தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீராக பராமரிக்க வேண்டும். பிரச்சனை வந்த பின் சரி செய்வதை விட, பிரச்சனை வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும். அதேபோல் மாதிரி பள்ளிகளில் உணவு, மனநலம், உட்கட்டமைப்பு ஆகிய மூன்றையும் தரமாக பேணி பாதுகாக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல் சாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது. பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை. தமிழக பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றுக்கும் மட்டுமே இடம் உண்டு. பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடம் கிடையாது.
மாணவர்களின் குற்ற மனநிலையை மாற்றுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கோ அல்லது அறிவியலுக்கு புறம்பான காரியங்களுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இனி தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.முன்னாள் மாணவர்களை பள்ளிகளின் தூதர்களாக மீண்டும் அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் தங்களின் கடந்த கால கஷ்டங்களையும், அதனை கடந்து எப்படி சாதனையாளர்களாக உயர்ந்தார்கள் என்பதையும் பகிர்ந்து க்ண்டு பெரிய உத்வேகத்தை அளிப்பார்கள். மாணவர்களின் போதையின் பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.







