தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின் வாரியம் சீரமைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்க முடியாத துயரத்தில் நள்ளிரவிலும் பொதுமக்கள் சாலைகளுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை வாயிலாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள் என்று சொல்லி சிசிடிவி கேமரா வீடியோவை அமைச்சர் நிர்மல் குமார் பதிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள செந்தில் பாலாஜி, பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது என்று வினவியிருந்தார். மேலும், நள்ளிரவில் போராடும் மக்களின் துயரை துடைக்கும்வகையில், மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.இதற்கு, டான்ஜெட்கோவின் எக்ஸ் தளப் பதிவை பகிர்ந்து பதிலளித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாட்டில் சனிக்கிழமை 29 இடங்களில் ஏற்பட்ட மின்தடையை மின்வாரியம் சீரமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பெருவிளை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரம் உள்ளிட்ட 29 இடங்களில் மின் தடை ஏற்பட்டதற்கான காரணத்தைக் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவை குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 17 மணி நேரம் 15 நிமிடங்களில் சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது என்பதையும் அமைச்சர் நிர்மல்குமார் குறிப்பிட்டுள்ளார்.







