பிரதமர் நரேந்திர மோடி: கேரளாவில் ,பாஜக மாநில மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்…

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், இன்று கேரளா செல்கிறார். லட்சத்தீவில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்,. திருச்சியில் நேற்று நடந்த விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக சொல்வது என்றால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செங்கல்பட்டு முதல் எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தர்மபுரி மல்டி பிராடக்ட் பெட்ரோலிய குழாய் திட்டம். கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை. செங்கோட்டை-தென்காசி சந்திப்பு- நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் திட்டம். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக்கப்பல் தங்குமிடம் 2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி, இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்க தூர்வாரும் கட்டம்-5) நாட்டுக்கு அர்ப்பணிப்பு போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூரு-மங்களூரு எரிவாயுக்குழாய்-2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் மல்டிபிராடக்ட் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். திருச்சியில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கேரள மாநிலம் திருச்சூருக்கு வருகிறார். திருச்சூர் தேக்கின் காடு மைதானத்தில் நடைபெறும் பாஜக மாநில மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி ஹெலிகாப்டரில் லட்சத்தீவில் இருந்து திருச்சூர் அருகே குட்டநல்லூரில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு மாலை 3.15 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்சூர் நகருக்கு வரும் பிரதமர். தொடர்ந்து 3.30 மணிக்கு சாலை பேரணி செல்கிறார். இதையடுத்து மாலை 4.15 மணிக்கு மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த மாநாட்டில் கேரள மாநில பாஜதலைவர் சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, நடிகை ஷோபனா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு காரணமாக திருச்சூர் நகரம் முழுவதும் போலீஸ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர், கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் தேக்கின் காடு மைதானம் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் முழுமயாக கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி குட்டநல்லூர் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து திருச்சூர் நகர், தேக்கின் காடு மைதானம் வரை வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் திருச்சூருக்கு வருகை தரும் போது அவரை  வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாஜக பிரம்மாண்டமாக செய்துள்ளது.