முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவு செல்கிறார் என்பது தவறான தகவல் – கொடைக்கானல் போகிறார்.!!

கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது.

அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் வேலைகளை செய்தார்கள்.

இப்போது தேர்தல் முடிந்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் கோடை வெயிலுக்கு இதமாக் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட முக்கிய கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக பலரும் கொடைக்கானலுக்கு படை எடுத்து வருகிறார்கள்.. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது குடும்பத்துடன் கொடைக்கானலில் தங்கி சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், தமிழக பாஜக தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்தார். அவர் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு வந்தனர்.

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஏரளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கொடைக்கானலுக்கு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் களைகட்டியுள்ளது.

இதனிடையே-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி(திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளத. இதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலை துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் ஏப். 29 முதல் மே 4 வரை ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் செல்லும் இடங்கள் ,ரோடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கொடைக்கானலில் ஆய்வு செய்ய உள்ளார்.

2021ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒரு வாரம் தங்கினார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்து ஓய்வுக்காக அதே ஓட்டலில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.