மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை… வீடுகள் தீக்கிரையானது- மே 26 வரை செல்போன், இணைய சேவை துண்டிப்பு..!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை நீடிப்பதால் அம்மாநிலத்தில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் மே 26 வரை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் வகையில் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மிகப் பெரும் வன்முறையை உருவாக்கிவிட்டது.

பழங்குடிகள் பட்டியலில் உள்ள நாகா, குக்கி இனமக்கள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான போராட்டங்களை தொடங்கினர். பின்னர் மைத்தேயி இன மக்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். அவர்களது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் மணிப்பூர் வாழ் தமிழர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் அனைத்து தரப்பினருடனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேலும் மணிப்பூரில் வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மணிப்பூரில் ஒரு சில இடங்களில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சில இடங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் மணிப்பூரில் வரும் 26-ந் தேதி வரை செல்போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில அரசு ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தது.