கோவையில் பிரதமரின் உருவ பொம்மை எரிக்க திட்டம்- வடமாநில விவசாயிகள் 10 பேர் கைது.!!

கோவை: பஞ்சாப் ,அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் விவசாயி ஒருவர் பலியானார். இதனால் அந்த விவசாயின் அஸ்தியை கிஷான் மஸ்தூர் மோட்சா என்ற விவசாய அமைப்பின் தலைவர் சர்வன்சிங் உள்ளிட்ட விவசாயிகள் நாடு முழுவதும் எடுத்துச் சென்று வருகிறார்கள். தற்போது அந்த விவசாய அமைப்பினர் கோவை வந்துள்ளனர். அவர்களுக்கு முற்போக்கு அமைப்புகள் வரவேற்பு அளித்தன. இதற்கிடையில் பிரதமர் மோடி மற்றும் அரியானா முதல் மந்திரியை கண்டித்து நேற்று வட மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ள கிஷான் மஸ்தூர் மோட்சா அமைப்பினர் பிரதமர் மோடி மற்றும் அரியானாமாநில முதல் மந்திரி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் காந்திபுரத்தில் உள்ள அந்த ஓட்டலில் தங்கி இருந்த விவசாயிகளை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் வட மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிஷான் மஸ்தூர் மோட்சா விவசாயிகள் தலைவர் சர்வன் சிங் உட்பட வட மாநில விவசாயிகள் 10 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.