குருவாயூர் கோயிலில் முதன் முறையாக ரவி பிள்ளையின் சொகுசு ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை.!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தினசரி ஏராளமானோர் தாங்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை பூஜைக்காக கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் முதல் முறையாக குருவாயூர் கோயிலில் வாகன பூஜைக்காக ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய விவரம் வருமாறு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரவி பிள்ளை. தொழிலதிபர். அவர் வாங்கிய புதிய சொகுசு ஹெலிகாப்டர் குருவாயூர் கோயிலுக்கு வாகன பூஜைக்காக கொண்டு வரப்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏர்பஸ் எச் 145 மாடல் சொகுசு ஹெலிகாப்டரின் விலை ₹ 100 கோடியாகும். உலகிலேயே இதுவரை இந்த சொகுசு மாடலில் மொத்தம் 1500 ஹெலிகாப்டர்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

பைலட் தவிர 7 பேர் இதில் பயணம் செய்யலாம். கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரம் வரை இந்த இரட்டை இன்ஜின் கொண்ட ஹெலிகாப்டரால் பறக்க முடியும். பெட்ரோல் கசிவை தடுக்கும் தொழில்நுட்பமும், விபத்தில் சிக்கினால் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்ஜின் அப்சார்பிங் தொழில்நுட்பமும் இந்த ஹெலிகாப்டரில் உண்டு. குருவாயூர் கோயிலுக்கு அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் இந்த ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை நடத்தப்பட்டது. ஹெலிகாப்டருக்கு வாகன பூஜை நடத்துவதை பார்ப்பதற்காக அங்கு ஏராளமானோர் திரண்டனர்.