பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட வேண்டும் என்று எந்த கடவுளும் கேட்பதில்லை… முக்கிய வழக்கில் நீதிபதி பேச்சு.!!

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில் கட்டும்படி எந்த ஒரு கடவுளும் கேட்பதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கடவுளே ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதனை அகற்றுவதற்கு உத்தரவிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அருள்மிகு பாலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சார்பாக பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் மேற்கொண்டு இருப்பதாகவும், இதனால் தங்கள் சோத்துக்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் உள்ளதாக கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாப்பாயி என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர் தெரிவித்த அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி தெரிவிக்கையில், “பொது பாதையை ஆக்கிரமித்தது யாராக இருந்தாலும், அது கோவில் நிர்வாகமாக இருந்தாலும், அதிகாரிகள் அதனை தடுக்க வேண்டும்.

கோவில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலருக்கு தற்போது ஏற்பட்டு உள்ளது. கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்து இருந்தாலும், அதனை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

தற்போது போதுமான அளவுக்கு கோவில்கள் இருப்பதால், பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட வேண்டும் என்று எந்த கடவுளும் கேட்பதில்லை” என்று நீதிபதி தெரிவித்தார்.