ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை-விசாரணை நவ.7-க்கு ஒத்திவைப்பு..!!

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகோரிய வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகப்படும் வகையிலான தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி மதன் கடந்த 28-ம் தேதி திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ரவுடிகள் 13 பேரும் நவ.1-ம் தேதி (நேற்று) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த சாமி ரவி(எ) குணசீலன் (46), ரங்கம் ராஜ்குமார் (32), சிவா (எ) குணசேகரன் (33), திலீப்குமார் (எ) லட்சுமி நாராயணன் (31), சீர்காழி சத்யா (எ) சத்யராஜ் (40), குடவாசல் எம்.ஆர்.சண்முகம் (எ) தென்கோவன் (44), மணல்மேடு சோழியங்கோட்டகம் கலைவாணன், திருவாரூர் மாரிமுத்து(40), திண்டுக்கல் மோகன்ராம் (42), கணேசன் (எ) நரைமுடி கணேசன் (44), தினேஷ்குமார் (38), சிதம்பரம் சுரேந்தர் (38) ஆகியோர் தங்களது வழக்கறிஞர்களுடன் திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

இதுதவிர கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த ரவுடிசெந்தில் (எ) லெப்ட் செந்தில் என்பவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த அனுமதிகேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், கடலூர் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக எஸ்.பி.ஜெயக்குமார் உள்ளதால், அவர்தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதற்கு மாறாக டிஎஸ்பி மதன் மனு தாக்கல் செய்துள்ளதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும் ரவுடிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதி சிவக்குமாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்குவிசாரணையை நவ.7-ம் தேதிக்குதள்ளிவைத்த நீதிபதி சிவக்குமார், அன்றைய தினம் எஸ்.பி.ஜெயக்குமார் புதிதாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் ரவுடிகள் தரப்பில் ஆஜரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ் கூறும்போது, ”இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு எந்த அடிப்படையில் சந்தேக நபர்களை தேர்ந்தெடுத்தனர் என புரியவில்லை. சந்தேக நபரின் வழக்கறிஞரும், மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்” என்றார்.