கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் – உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு – சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல் – உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அல் – உம்மா இயக்க தலைவர் பாஷா உள்பட 17 பேர் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பாஷா, உறவினர்களை சந்திப்பதற்காக 15 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டு இருந்தார். கோவை உக்கடம் பிலால் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பாஷா, பரோல் முடிந்து இரவில் கோவை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். சிறை வளாகத்திற்கு வந்ததும், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அங்குள்ள திண்டில் படுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாஷாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது:-

அவருக்கு இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாஷா தற்போது நலமாக உள்ளார். அரசு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார் என்று தெரிவித்தனர்.

பாஷா குணம் அடைந்ததை தொடர்ந்து, மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சிறை மருத்துவர்கள் மூலம் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்று சிறை சூப்பிரண்டு ஊர்மிளா தெரிவித்தார்.