நவ.17ம் தேதி கோவையில் அமைதிப் பேரணி – டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு..!

கோவை: சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கோவையில் வரும் 17-ம் தேதி அமைதி பேரணி நடைபெறும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வாழ்ந்திடும் தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

எனவே, கோவை மாநகரில் நிரந்தரமாக அமைதியை, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு நவம்பர் 17-ம் தேதி கோவையினுடைய அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் ஓர் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணி முழுக்க முழுக்க அரசியல், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கோவையின் பாரம்பரிய அமைதியையும், தொழில், வணிக செழுமையையும் மீட்டெடுக்கும் பொருட்டு நடைபெறக்கூடிய ஒரு மக்கள் இயக்கம் ஆகும். எனவே, இதில் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.