அக்.4 முதல் 7ம் தேதி வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி.!!

2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கிட முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில் நடத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிமனையில் மேல் நிலை வகுப்பறைகளுக்கான (11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை) முதற் கட்டமாக இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சியினை வழங்கிடும் வகையில் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில் 04.10.2023 முதல் 07.10.2023 முடிய திறன்வளர்ப் பயிற்சியாக சென்னை-08, எழும்பூர். ஓட்டல் காஞ்சியில் கீழ்கண்டவாறு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இணைப்பில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முதன்மைக் கருத்தாளர்களை உரிய நாட்களில் பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உரிய முதன்மைக் கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அக்டோபர் இரண்டாம் வாரம் முதல், வரத்திற்கு ஒரு பாடம் வீதமாக, 4 வாரங்களில் 4 பாடங்களுக்கான பயிற்சியினை நடத்திடவும், குழு ஒன்றிற்கு 50 நபர்களுக்கு மிகாமல் திட்டமிட்டு, இப்பயிற்சியினை நடத்திடவும், ஆசிரியர்கள் பயிற்சிக்கு வந்து செல்ல எதுவாக போக்குவரத்து வசதி, தேவையான இட வசதி, காற்றோட்டம், கழிப்பிட வசதி அமைந்துள்ள மையத்தினை தெரிவு செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்டங்களில் கருத்தாளர்களாக பணிபுரிபவர்களுக்கு மதிப்பூதியமாக ஒன்றுக்கு ரூ.1,000/- மற்றும் உணவு மற்றும் சிற்றுண்டி நாள் செலவினத்தினை நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு ரூ.150/- வீதமும், பங்கேற்பாளர்களுக்கு உள்ளூர் போக்குவரத்து படி மட்டும் ரூ.100 வழங்கப்படும். இப்பணிமனையினை திறம்படும் வகையில் மாவட்டங்களில் செயல்படுத்திட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணிமனையில் பங்கேற்கவுள்ள முதன்மைக் கருத்தாளர்கள் தங்களுடைய பாடத்திற்கு ஏற்றவாறு பாடநூல்களை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ..