பாஜகவில் இணைந்த பிரபல ரவுடிக்கு முக்கிய பொறுப்பு..!

பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, இளைஞர்கள் வன்முறையை நாடக்கூடாது, வன்முறை தீர்வாகாது என அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா(38). இவர் நெடுங்குன்றம் சூர்யா என அழைக்கப்படுகிறார். சூர்யா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி விஜயலட்சுமி நெடுங்ன்றம் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் பாஜகவில் இணைந்துள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவிற்கு பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் துர்கா காலனியில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய நெடுங்குன்றம் சூர்யா, “ஒருங்கிணைந்த மனித நேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளேன். எனது மனைவி பாஜக மகளிர் அணியில் உள்ளார். நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலையின் பணிகளை பார்த்து ஈர்க்கப்பட்டும், தன் மனைவி பாஜகவில் இருக்கும் திட்டங்களை எங்கள் பகுதியில் செய்து வருவதை பார்த்தும் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை வேலை பார்க்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எங்களது வகுப்பின மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் தேடி தேடிச் செய்யும் தலைவராக அண்ணாமலை உள்ளார். அவரின் ஆளுமை பிடித்ததால், இந்த கட்சியில் நாங்கள் இணைந்துள்ளோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக பணியாற்றுவோம். அண்ணாமலைக்கு உறுதுணையாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் தற்போது எந்த வழக்கிலும் என்மீது வாரண்ட் கிடையாது. என்மீது புதிதாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. பாதிக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளேன். மேலும் அனைத்து வழக்குகளுக்கும் ஆஜராகி வருகிறேன். தற்போது எந்த சம்பவங்களிலும் ஈடுபடுவதில்லை.

ஊழலை ஒழிப்போம் என தலைவர் கூறுகிறார் அது எங்களுக்கு பிடித்திருக்கிறது. இளைஞர்களுக்கு ரவுடி சூர்யா கூறுவது வன்முறையை நாடகூடாது, எதற்கும் வன்முறை தீர்வாகாது, நல்ல அரசியல், தெளிவான அரசியல் நல்ல அரசியல் செய்யும் தலைவர்களோடு பயணம் பண்ணுங்கள் நான் இன்று நல்ல தலைவரோடு பயணம் செய்கிறேன்.

என் பெயரை தவறாக பயன்படுத்துவோர் இனிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படி மீறி பயன்படுத்துவோர் மீது காவல்துறை தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்றார். போதையை ஒழிக்க வேண்டும், பாஜகவில் சேர்ந்த பிறகு என்னுடையை வேலைகள் சுத்தமாக இருக்கும், இனி வன்முறை இருக்காது” என தெரிவித்தார்..