உலகின் தற்போது உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை ஐ.நா.,- பிரதமர் மோடி மனம் திறந்த பேச்சு..!

ஹிரோஷிமா: ”உலகின் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா., மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை வெறும் பேச்சுக்கான இடமாக மட்டுமே நிலைத்திருக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சவால்களை கையாள்வதற்காகவே ஐ.நா., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள போது, அது குறித்து பல்வேறு அமைப்புகளும் ஏன் விவாதிக்கின்றன.பயங்கரவாதத்தின் வரையறை கூட ஐ.நா.,வில் ஏன் ஏற்கப்படவில்லை; இதை சுய பரிசோதனை செய்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகிறது.

கடந்த நுாற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகள், 21ம் நுாற்றாண்டுடன் பொருந்திப் போவதில்லை. இன்றைய உலகின் உண்மை நிலவரங்களை ஐ.நா., பிரதிபலிப்பதில்லை. எனவே, தான் ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.ஐ.நா., சபை, உலகளாவிய தென் பகுதியின் குரலாகவும் மாறவேண்டும். இல்லையெனில், மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருப்போம்.

ஐ.நா.,வும், பாதுகாப்பு கவுன்சிலும் வெறும் பேச்சுக்கான இடமாக மட்டுமே நிலைத்திருக்கும்.உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையை அரசியல் அல்லது பொருளாதாரம் தொடர்பான பிரச்னையாக நான் கருதவில்லை. இது மனிதநேயத்தின் பிரச்னை, மனித விழுமியங்களின் பிரச்னை என்றே நம்புகிறேன்.இதற்கு பேச்சு வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

மோடி – ரிஷி சுனக்ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமரான, இந்தியாவை பூர்வீகமாக உடைய, ரிஷி சுனக் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினர்.அப்போது, தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.இரு தரப்பு வர்த்தகக் குழுக்கள் தங்களுடைய பேச்சுக்களை விரைவுபடுத்தி, இந்த ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை வேகப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். மறுசுழற்சி செய்யப்பட்ட ‘கோட்’பிரதமர் மோடி, ‘ஜி – 7’ மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, ‘பிளாஸ்டிக் பாட்டில்’களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட, ‘கோட்’ அணிந்திருந்தார். பயன்படுத்தப்பட்ட, ‘பெட் பாட்டில்’களை சேகரித்து அவற்றை நசுக்கி உருக்கி வண்ணம் சேர்த்து, நுால் உற்பத்தி செய்வதன் வாயிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட துணி தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை பல்வேறு உற்பத்தி நிலைகளில் உமிழ்வை கடுமையாக குறைக்கிறது.மோடியிடம் கேட்ட பைடன்அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.

பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் 22ம் தேதி, அதிபர் ஜோ பைடன், இரவு விருந்து அளிக்கிறார். இதற்கிடையே, ஜப்பானில் நடந்து வரும், ‘ஜி – 7’ மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் பைடன், புகார் ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:எனக்கு மிகப் பெரிய பிரச்னையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் உங்களுக்கு அளிக்கப்பட உள்ள இரவு விருந்தில், நாட்டில் உள்ள அனைவருமே பங்கேற்க விரும்புகின்றனர். கைவசம் ஒரு டிக்கெட் கூட இல்லை.

நான் விளையாட்டுக்காக கூறுவதாக நீங்கள் நினைக்கலாம். என்னுடைய அதிகாரிகளிடம் விசாரித்து பாருங்கள். எனக்கு பழக்கம் இல்லாத நபர்களிடம் இருந்தெல்லாம் எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. திரைப்பட நடிகர்கள் முதல் உறவினர்கள் வரை பல திசைகளில் இருந்தும் அழைக்கின்றனர்.

நீங்கள் மிகவும் பிரபலமாக உள்ளீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஆட்டோகிராப்’ கேட்டு வாங்கினார். கட்டுப்பாடுபிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, நேற்று இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.இங்கு சூரிய அஸ்தமனத்துக்குப் பின், எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு அளிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், பிரதமர் மோடிக்காக அந்த கட்டுப்பாட்டை தளர்த்திய, அந்த நாட்டு அரசு, அவருக்கு விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளித்தது. அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார்.பப்புவா நியூ கினியாவில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தக வெளியீட்டு விழா, இந்தோ – பசிபிக் தீவு நாடுகளின் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.