இன்று ஸ்ரீநகரில் நடக்கும் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம்… காஷ்மீரில் போலீஸ், ராணுவம் குவிப்பு.!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது.

ஜி 20 நாடுகள் என்பது உலகின் சக்தி வாய்ந்த, வளர்ந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ கூட்ட‌மைப்புதான் ஜி 20 ஆகும்.

இதற்கு தலைவராக உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் பதவி வகிக்கும். 2022ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வகித்து வருகிறது. இந்தோனேசியாவிடம் இருந்த தலைவர் பதவி சுழற்சி முறையில் இந்தியாவிடம் வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டில் முதல் முறையாக ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டைக் இந்தியா கூட்டவுள்ளது.

9 செப்டம்பர், 2023 – செப்டம்பர் 10, 2023 வரை இந்த மாநாடு நடக்க உள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அல்லது ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியா இந்த மாநாட்டிற்கான கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த ஜி 20 மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு தலைப்புகளின் கீழ் நாடு முழுக்க பல பகுதிகளில் கூட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு குழுக்கள் சார்பாக கூட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா என்று பல்வேறு துறைகள் சார்பாக பல குழுக்கள் உள்ளன. அந்த வகையில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது.

பெரும் பாதுகாப்பிற்கு இடையில் 20 நாட்டு தலைவர்கள் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.மே 24ம் தேதி வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது.

இந்த குழுவின் முதல் கூட்டம் குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடந்தது. இரண்டாவது குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு பெங்காவில் சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கில் நடந்தது.

இந்த நிலையில் மூன்றாவது குழு கூட்டம் தற்போது காஷ்மீரில் நடக்க உள்ளது. இந்த கூட்டம் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கே ராணுவம், போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தால் ஏரியின் கரையில் உள்ள ஷெரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இந்த கூட்டம் நடைபெறும். G20 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் உட்பட 180க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி 20 நாடுகளின் சுற்றுலா துறை அமைச்சர்கள், அதிகாரிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருவார்கள். இந்த குழுவின் கடைசி சந்திப்பு அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அச்சறுத்தல் உள்ள நிலையில் அங்கு நடக்கும் இந்த கூட்டம் அதிகம் கவனிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு ஜி 20 சுற்றுலா குழு மீட்டிங்குகளை விட இதில்தான் அதிக உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சில உறுப்பு நாடுகள் இன்னும் பதிவு செய்யவில்லை. முக்கியமாக சீனாவும் துருக்கியும் இன்னும் இந்த சுற்றுலா ஜி 20 கூட்டத்திற்கு பதிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் எல்லை விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதை துருக்கி எதிர்த்து வரும் நிலையில் அந்த நாடும் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.