உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் சீனாவில் ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகிய இருவருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்த இவர்கள் இருவரும், லஞ்சம் வாங்கியது மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற புகார்களில் சிக்கியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்குமுறைகளை மீறியதற்காகவும், தேசத்திற்குத் துரோகம் இழைத்ததற்காகவும் இந்த உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த மரண தண்டனையில் ஒரு சிறிய ட்விஸ்ட் உள்ளது; அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் நடத்தையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாம்.ஆனால், அந்த ஆயுள் தண்டனை எக்காரணம் கொண்டும் குறைக்கப்படாது என்றும், அவர்களுக்குப் பரோல் போன்ற எந்த சலுகையும் வழங்கப்படாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சொந்த நாட்டு அமைச்சர்களுக்கே மரண தண்டனை விதித்து அதிபர் ஷி ஜின்பிங் காட்டியுள்ள இந்த ‘ஸ்ட்ரிக்ட்’ அதிரடி, சீன ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.









