வலுபெறுகிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்… புதுவை, ஆந்திரா மாநிலங்களில் ஆரஞ்சு அலெர்ட்.. அதி கனமழைக்கு வாய்ப்பு..!

புதுவை, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வரும் நாள்களில் 7 மாநிலங்களில் அதி கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குஜராத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆந்திரா – ஒடிசாவை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் இதனால் தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கும், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கும் கன மழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ராயலசீமா, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், கேரளா மாஹே ஆகிய இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவுக்கும், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளுக்கும் செப்டம்பர் 10, 11 தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.