தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் ‘குறிஞ்சி’ இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விடுப்பில் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அவர் பதவியேற்கும் நிகழ்ச்சி தள்ளிப்போனது அரசியல் களத்தில் குழப்பத்தை உண்டாக்கியது. இந்த சூழலைப் பயன்படுத்தி, ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்தன. இத்தகைய பரபரப்பான அரசியல் நகர்வுகளுக்கு இடையே, விடுப்பில் சென்ற போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவே அவசரமாக மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.
தற்போது உதயநிதி இல்லத்தில் மீண்டும் மூன்று ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் நீடிக்கும் இழுபறிக்கு மத்தியில், உதயநிதிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது, திரைமறைவில் ஏதோ ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழப்போகிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் பலப்படுத்தியுள்ளது.







