விஜய்க்கு ஆதரவு! டெல்லியில் சிபிஎம் தலைமை அறிவிப்பு

 தமிழகத் தேர்தல் முடிவுகள் மற்றும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சிபிஐ(எம்) அகில இந்தியச் செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தமிழகத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , பெரும்பான்மைக்குச் சில இடங்களே குறைவாக உள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நடைமுறையின்படி, தனிப்பெரும் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் அளித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் கௌரவத்திற்குரிய ஆளுநர் ஏன் இதனைச் செய்யவில்லை என்பது வியப்பாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கிறது. ஜனநாயக நடைமுறையில் உருவாகியுள்ள இந்தச் சிக்கலைத் தவிர்க்கவும், மக்கள் அளித்தத் தீர்ப்பை மதிக்கவும் சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் விசிக ஆகிய நட்பு கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறோம். ஒரு சில மணி நேரத்திற்குள் நாங்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுப்போம். இதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த முட்டுக்கட்டையைத் தவிர்க்க முடியும். தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். அதற்கு என்ன தேவை என்பது குறித்து இந்த மூன்று கட்சிகளும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில், “விஜய் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவதை உறுதி செய்ய, இந்தத் தோழமைக் கட்சிகள் அனைத்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அதிமுகவிற்குத் தேவையான ஆதரவு கிடைக்கப் போவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தெளிவாக உள்ளது. எம்.எல்.ஏ-க்களை எங்கிருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. எங்களின் கணிப்புப்படி, சட்டப்பேரவை கூடும்போது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.