கோவை கலெக்டர் அலுவலகத்தில் டீசல் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு..!!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வந்தனர். அப்போது ஒரு தம்பதியினர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் டீசலை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. போலீசார் டீசல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது இடத்தை அண்ணன் – தம்பி ஆக்கிரமிப்பு செய்துவிட்டு தொல்லை கொடுப்பதால் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தனர். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர்.

இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பெயர் நாகராஜ் (வயது 54). எனது மனைவி திலகவதி (50). நாங்கள் பீடம்பள்ளி அருகே உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அங்குள்ள அண்ணன்- தம்பி 2 பேரும் ஆக்கிரமிப்பு செய்து எங்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் 8 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நாங்கள் தற்கொலை செய்து கொள்ள டீசல் கேனுடன் வந்தோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.