கோவையில் கடந்த 5 மாதங்களில் 171 போக்சோ வழக்குகளுக்கு குற்றப் பத்திரிகை தாக்கல்- போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தகவல்..!

கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 67.5 லட்சம் மதிப்பிலான 451 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 110 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட்டது.கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். மொத்தம் 1564 சிலைகள் கோவை மாவட்டத்தில் வைக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபட உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா மிக அமைதியாக நடக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது கோவை மாவட்ட பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக பிராஜெக்ட் பள்ளிக்கூட திட்ட மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி, பள்ளிக்கு அருகில் கஞ்சா, போதை பொருட்களை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இவர் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்த கொலை, கொள்ளை, நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 5 மாதங்களில் 4222 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 203 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.39 லட்சம் மதிப்பிலான 313 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 224 திருட்டு வழக்குகளில் 252 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக 171 போக்சோ வழக்குகளுக்கு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 81 வழக்குகள் நீதிமன்ற விசாரணை கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரில் இருவருக்கு ஆயுள் மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 15 முதல் 20 ஆண்டு சிறையும், 2 இரண்டு பேருக்கு 10 முதல் 15 ஆண்டும், 2 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறையும் தண்டனை வழங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் குற்ற சம்பவம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட போலீஸ் சார்பாக பிராஜக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் தற்போது வரை 662 பள்ளிகளில் 1041 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி 10 வயதுக்கு கீழ் உள்ள 30, 667 குழந்தைகளுக்கும், 10 வயதுக்கு மேற்பட்ட 53 ஆயிரத்து 452 குழந்தைகள் என மொத்தம் 84,019 குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.