குழந்தைகளுக்கு நாளிதழ்கள் வாசிக்க கற்றுக் கொடுங்கள்- உதகை கிரசன்ட் பள்ளி ஆண்டு விழாவில் சைலேந்திபாபு உரை.!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியின் 26ம் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. விழாவில், பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துங்கள். சிறந்த கல்வி இல்லையென்றால், இந்த நாடு முன்னேற்றம் அடையாது. எனவே, குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க பெற்றோர்கள் முன்வாருங்கள் என்றார். இந்த உலகம் போட்டிகள் நிறைந்தது. எனவே, சிறந்த கல்வி இருந்தால், அதனை தகர்த்துவிட்டு முன்னேற்றம் அடையலாம். படிக்கும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் என பாரபட்சம் பார்க்க கூடாது. அவர்களை அடிப்பதை, திட்டுவதை தவிர்த்துடுங்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். 18 வயது வரை உள்ள அனைவருமே குழந்தைகள் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித் திறமை உள்ளது. அதனை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த வழியில் கொண்டுச் செல்லுங்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் எதனை செய்தாலும், அவர்களை பாராட்டுங்கள். குழந்தைகள் மத்தியில் பாகுபாடு காட்டாதீர்கள். குழந்தைகள் நாள் தோறும் நாளிதழ்கள் வாசிக்க கற்றுக் கொடுங்கள். குறைந்தது அரை மணி நேரம் நாளிதழ்களை வாசிக்க கற்றுக் கொடுங்கள். நீங்களும் வாசியுங்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் தான் ரோல் மாடல். அவர்கள் உங்கள் ரசிகர்களாக உள்ளனர். எனவே, அவர்களை நல்ல வழியில் கொண்டுச் செல்வது பெற்றோர்கள் கையில் உள்ளது. அனைத்து குழந்தைகளையும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட அனுமதியுங்கள். அப்போது தான், அவர்கள் உடல் தகுதியானதாக இருக்கும், என்றார்.இவ்விழாவில், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.