வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 8 பேருக்கு தண்டனை- கோவை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

கோவை அருகே உள்ள பெரியதடாகம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது அப்பகுதியைச் சார்ந்த பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைப்பார்கள். அவ்வாறு பட்டியலின மக்கள் துடுமம் அடிக்க சென்ற போது அவர்களை இழிவாக நடத்தினர். எனவே கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி அவ்வாறு ஆதிக்க சாதியினர் பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைத்த போது அவர்கள் மறுத்துவிட்டனர். அதனால் கோபமடைந்த ஆதிக்க சாதியினைச் சார்ந்த சிலர் கும்பலாகச் சென்று பட்டியலின மக்களை ஏன் துடுமம் அடிக்க வரவில்லை ?என்று கேட்டு சாதிப்பெயரினைச் சொல்லி இழிவு படுத்தி மரத்தடிகள், இரும்புத் தடிகளால் தாக்கி காயபடுத்தினர். இந்தக் குற்றம் தொடர்பாக ஆதிக்க சாதியைச் சார்ந்த 22 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரனை நடத்தப்பட்டது. இதையடுத்து கோயமுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞர் எம்.ஆனந்தன் அவர்களை தமிழ்நாடு அரசு சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்தது. கோயமுத்தூர் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 22 நபர்களில் 8 நபர்களுக்கு தண்டனை அளித்தும், மீதமுள்ளவர்களை விடுதலை செய்தும் நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். கோவை மாவட்டத்தில் வன்கொடுமை வழக்கில் 8 நபர்களுக்கு தண்டனை அளித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தீர்ப்பினைக் கேட்டு பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் தங்களுக்கு நீதி கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். வழக்கை திறம்பட நடத்திய சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஆனந்தன் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களும், வழக்கறிஞர்களும், சமூகநீதி ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.