வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்டோர் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருபவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்த ஆய்வு மீண்டும் நடத்தப்பட்டதில் 32 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றை வருவாய் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியை நேற்று காலை தொடங்கினர்.

வேலூர் வட்டாட்சியர் செந்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளர் பிரகாஷ், துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தங்களை வெளியேற்றக்கூடாது என வலியுறுத்தினர்.

ஆனால், அவர்களை எச்சரித்த காவல் துறையினர் ‘பொக்லைன்’ இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றிய பிறகு அங்கு நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் என்பதை குறிக்கும் அடையாள கற்கள் நடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.