பாதுகாப்பு படையில் களமிறங்கும் புதிய அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள்… அசத்தும் இந்தியா..!

னித குலத்திற்கு எப்படி நவீன தொழில்நுட்பம் அவசியமோ அப்படித்தான் ஒரு நாட்டிற்கும். ஆயுதங்கள் தயாரிப்பதில் மட்டுமின்றி நாட்டு எல்லைகளை காப்பதிலும் நவீனம் அவசியம்.

அதிலும் காலத்திற்கு ஏற்ற அப்டேட் வேண்டும். இல்லை என்றால் எல்லையில் எத்தனை போர் வீரர்களை நிறுத்தினாலும் பயன் இல்லை. இந்தியா இன்று சொந்த தயாரிப்பில் முன்னேறி அசத்தி வருகிறது. பல ஆயிரம் கோடி செலவழித்து வெளிநாடுகளில் ஆயுதங்களுக்காக கையேந்தும் நிலை இனி வெகு விரைவில் மறையும். நமது நாடு முழுவதும் ஆயுத தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு நவீன ஆயுதங்கள் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இனி இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறையில் களமிறங்க இருக்கும் புதிய நவீனங்கள் இவை:

விஎஸ்எச்ஓஆர்ஏடி ஏவுகணை: சீனாவை எதிர்கொள்ள ரஷ்யா உதவியோடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை இது. ரஷ்யாவில் உள்ள இக்லா- எஸ் என்ற விமானப்படை பாதுகாப்பு ஏவுகணை அடிப்படையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. விமானப்படைக்கு உதவியாக இருக்கும் ஏவுகணை. இதன் மூலம் மலைப்பகுதிகளில் எந்த இடத்திலும் எடுத்துச்சென்று தாக்க முடியும்.

முக்கிய அம்சங்கள்
*மனிதனால் எளிதில் எடுத்துச்செல்ல முடியும்.
* குறுகிய தூர தாக்குலுக்கு பயன்படுத்த முடியும்.
* எல்லையில் அத்துமீறும் விமானம் அல்லது ஹெலிகாப்டரை அழிக்க பயன்படுத்தலாம்.
*  அதிகபட்சமாக 8 கிமீ தூரம் வரை சென்று தாக்கும். மேலும் 4.5 கிமீ உயரத்தில் உள்ள  இலக்குகளை குறிவைக்கும் திறன் கொண்டவை.

ஹெலினா ஏவுகணை: உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஹெலினா ஏவுகணை 2022 ஏப்ரல் 11ல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இப்போது பாதுகாப்பு படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீனமான இலகுரக ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கிகள் மீது குறிவைத்து தாக்கி அழிக்க இந்த ஹெலினா ஏவுகணை பயன்படுத்தப்பட உள்ளது. அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயக்கப்படும் இந்த ஏவுகணை தான் தற்போது உலகிலேயே பீரங்கிகளை நொறுக்க பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் மிகவும் நவீனமயமான ஒன்றாக கருதப்படுகிறது. இது 3வது தலைமுறை ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்
* எந்த இடத்திற்கும் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்று தாக்க முடியும்.
* பகலானாலும் சரி, இரவானாலும் சரி எப்படிப்பட்ட வானிலையிலும் இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டது.
*  குறைந்தபட்சம் 500 மீட்டர் முதல் அதிகபட்சமாக 7 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

அக்னி ஏவுகணை: இந்தியாவின் பாரம்பரிய ஏவுகணை அக்னி. கடந்த டிசம்பரில் 5 ஆயிரம் கிமீ தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா சோதித்து வெற்றி கண்டுள்ளது. அணுகுண்டுகளை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை தற்போதைய நிலவரப்படி சீனாவின் பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இங்கிருந்து தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது.

ஐஎன்எஸ் அரிஹந்த்: நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவும் அணுஆயுத ஏவுகணை. 750 கிமீ தூரம் சென்று தாக்க முடியும்.

பிரமோஸ் நவீன பதிப்பு: கடந்த மே மாதம் இந்தியா su-30 mki என்ற போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் மேம்படுத்தப்பட்ட நவீன ஏவுகணையை சோதித்து பார்த்து உள்ளது. வெற்றிகரமாக நடந்த இந்த சோதனை இலக்கை தாக்கி உள்ளது. இதுவும் பலம் சேர்க்க உள்ளது.

நவீன டிரோன்கள்: லடாக், அருணாச்சலில் அத்துமீறும் சீனாவின் எல்லை மீறல்களை கண்காணிக்க அதிநவீன டிரோன்களை வாங்க முடிவு செய்துள்ளது ராணுவம். சுமார் 2 ஆயிரம் டிரோன்கள் படையில் இணைய உள்ளன. இதில் 400 டிரோன்கள் ஆயுத தளவாட கண்காணிப்பு வசதிக்காகவும், 1500 டிரோன்கள் பல்வேறு வகையான எல்லை கண்காணிப்பிற்காகவும் வாங்கப்பட உள்ளன. 5 கிலோ முதல் 40 கிலோ எடை வரை கொண்ட பல்வேறு வகையான இந்த டிரோன்கள் 5 கிமீ முதல் 20 கிமீ வரை பறந்து சென்று எல்லையை கண்காணிக்க உதவும்.முக்கியமாக 90 நிமிடம் முதல் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் வகையில் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டு விரைவில் படைபலத்தில் இணைய உள்ளன.

ஏகே-203 துப்பாக்கி: ரஷ்ய உதவியுடன் உபி மாநிலம் அமேதியில் தயாரிக்கப்படும் அதிநவீன துப்பாக்கிதான் ஏ.கே.- 203. தற்போது ராணுவத்தினர் பயன்படுத்தும் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிக்கு மாற்று. எடுத்த எடுப்பிலேயே 7 லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

அதிநவீன போர்விமானம்: தேஜாஸ், ரபேல் ஆகியவை 5வது தலைமுறை போர்விமானங்கள். தற்போது இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் 6வது தலைமுறை போர்விமானங்களையும் தயாரித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும். ஏஎம்சிஏ மார்க் 2 என்ற வகையில் புதிய நவீன விமானம் ரஷ்யாவின் எஸ்யூ – 30 MKI விமான தரத்தின் அடிப்படையில் தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி இருக்கிறது. ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் முதல் விமானத்தை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பீரங்கி துப்பாக்கி: இந்திய ராணுவத்தின் அடுத்த நவீனம். முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு. பாலைவனம், மலைகள் மற்றும் உயரமான நிலப்பரப்புகளில் பயன்படுத்தக் கூடியது. 155 மிமீ/52 காலிபர் பொருத்தப்பட்ட பீரங்கி துப்பாக்கி இது. பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. தானியங்கி வகை என்பதால் கூடுதல் சிறப்பு. 45 கிமீ வரை சுட முடியும். அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ. வேகம் கொண்டது. இதில் 7 வீரர்களை ஏற்றிச்செல்ல முடியும். 30 வினாடிகளில் 3 ரவுண்ட் சுட முடியும். 3 வினாடிகளில் 12 ரவுண்ட் வரை சுட முடியும்.

இலகுரக பீரங்கி: லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளில் பயன்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே இலகுரக பீரங்கி தயாரிக்கப்பட்டு வருகிறது. லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் இதை வடிவமைத்து வருகிறது. 25 டன் எடை கொண்ட இந்த இலகுரக பீரங்கி அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் உள்ளது அதிக எடை கொண்டவை. ரஷ்யா தந்த T-20 பீரங்கி 42 டன் எடை கொண்டது. நமது நாட்டில் தயாரித்த அர்ஜூன் பீரங்கி 50 டன் எடை கொண்டது. எனவே விரைவாக இயங்கும் வகையில் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

வாகீர்: அதிநவீன புதிய நீர்மூழ்கி கப்பல். இலங்கை கடற்பகுதியில் உளவுபார்க்க அடிக்கடி வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் நவீன தயாரிப்பு. இந்திய பெருங்கடலில் இனி வாகீர் தான் ராஜா. பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மும்பையில் தயாரிக்கப்பட்டது. பிப்.1 முதல் பரிசோதனை செய்யப்படும்.