ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்ம மரணம் – தற்கொலையா..? போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் இன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரிழப்புக்கு விஷம் அருந்தியது காரணமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இரு சகோதரர்களும் கடும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல்களை கைப்பற்றிய அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் லோஹியா கூறியதாவது, ‘முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலையாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இரு சகோதரர்களும் பல்வேறு நபர்களிடம் அதிக கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த வீட்டிற்கு பால் ஊற்ற வரும் பெண் கொடுத்த தகவலின் பேரிலேயே இவர்களின் மரணம் காவல்துறையினரின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதால் பல்வேறு கோணங்கள் நாங்கள் விசாரணையை மேற்கொண்ட வருகிறோம்’ என்றார்.

உயிரிழந்தவர்களின் உடல்களில் எந்த வெளிப்புற காயங்களும் தென்படவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.