இந்த ஆண்டு அக்டோபா் மாதத்துக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளாா்.
ருவாண்டா தலைநகா் கிகாலியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் கூட்டம் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டம் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரிட்டனில் வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:
காமன்வெல்த் அமைப்பால் கிடைத்துள்ள சாதகங்கள், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 54 நாடுகளுக்கு அளப்பரிய மதிப்பை சோத்துள்ளது.
பசிபிக் தீவு கூட்டங்களில் ஒன்றான டுவாலு நாட்டின் மக்கள்தொகை 11,000 மட்டும்தான். அதேவேளையில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி ஆகும். எனினும் இவ்விரண்டு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் வரலாறு, விழுமியங்கள், அமைப்புகள், ஆங்கில மொழி ஆகியவற்றால் காமன்வெல்த் நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த் அமைப்பு மட்டும்தான் வேகமாக வளா்ந்து வரும் சந்தைகளை வா்த்தகத்தின் உண்மையான சாதகத்துடன் இணைக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் நாடுகளுடன் முடிந்த அளவு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்லது பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தனது இறையாண்மையை பிரிட்டன் பயன்படுத்துகிறது.
இதுவரை காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. அவை எல்லாவற்றையும்விட இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பெரிது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீபாவளி பண்டிகைக்குள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.
Leave a Reply