வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்த லிங்க்… கிளிக் செய்த கோவை வாலிபருக்கு பறிபோன ரூ.7 லட்சம்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை .!

கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30).

இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தேன். இந்நிலையில், எனது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. அதில் சென்று பார்த்த போது இ-பே இணையதளத்திற்கு சென்று பணம் முதலீடு செய்தால் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகை லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை உண்மை என நம்பிய நான் அதில் கூறப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு வெவ்வேறு கட்டங்களாக ரூ. 7,13,724 அனுப்பி வைத்தேன். ஆனால் அதில் சொன்ன படி எனக்கு லாபம் கிடைக்கவில்லை.

மேலும் நான் செலுத்திய பணத்தையும் எனது கணக்கில் வரவு வைக்க முடியவில்லை. போலியான லிங்க் அனுப்பி நூதன முறையில் ரூ.7,13,724 மோசடி நடை செய்துள்ளனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் உடனே நான் இது குறித்து போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.