இறைச்சிக் கழிவுகளால் சீரழியும் ஆறு… ஆனைமலையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தீவிரம் – கழிவுகளை வீசினால் ரூ.25 ஆயிரம் அபராதம்..!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை’ சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையில் கழிவுகள் குவிந்து ஆற்று நீர் மாசுபடும் அபாயம் உள்ளது. ஆனைமலை ஆற்றில் செல்லும் தண்ணீர் அம்பராம்பாளையம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்கு பயன்பட்டு வருகிறது. இதனால் ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், நகரில் பல இடங்களில் குப்பையை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்கவும் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக 12-வது வார்டில் ஆற்றங்கரைக்கு செல்லும் மயானப் பாதையிலும், 7-வது வார்டில் ராமபுரம் விதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் பேருராட்சி சார்பில் இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்பட்டார். இதனால் கழிவுகள் கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆனைமலையில் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக 2 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.இதனை செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இறைச்சிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகளை கடை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதை மீறி ஆற்றங்கரையில் கழிவுகளை வீசினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.