கவுகாத்தி :அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
3,246 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்கு இலக்காகி உள்ளது. 2.88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். திசாங், பராக் மற்றும் குஷியாரா ஆகிய ஆறுகளிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடியது. வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 1,00,732.43 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, மொத்தம் 499 நிவாரண முகாம்கள் மற்றும் 519 நிவாரண வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 92 ஆயிரத்து 124 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தகவல் தொடர்பு முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவை மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவுகளாலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் ரயில் சேவை ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. அசாமின் அனைத்துப் பகுதிகளிலும் அணைகள், சாலைகள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply