முதல் முறையாக சென்னையிலும் வந்துவிட்டது ஜல்லிக்கட்டு… முதல்வர் பெயரில் ஒரு காளை களமிறங்குகிறது..!

சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் ஒன்றாகத் திரண்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். பெரும்பாலும் சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்து விடுகிறது. அதனால் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை படப்பையில் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், முதல்வரின் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் இடம்பெற உள்ளன. தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்குக் காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம்பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது” என்றார்.