தமிழகம் என்ற சொல் சட்ட விரோதமான வார்த்தையா..? – வானதி சீனிவாசன் ஆவேசம்..!

மிழகத்தில் கடந்த ஒன்பதாம் தேதி, நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசித்து முடிந்ததும், அதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

அதனை அவர் அவையில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென கவர்னர் அவையிலிருந்து வெளியே சென்றார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இந்த நிலையில், கவர்னர் வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில், “தமிழக கவர்னர்” என்று அச்சிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளில் “தமிழ்நாடு கவர்னர்” என்று அச்சிடப்பட்டு இருந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “கவர்னர் ஒரு கருத்தை சொல்கிறார், அவர் அதை கட்டாயப்படுத்தவில்லை என்றால் அதற்கான மாற்று கருத்துகளால் அதை எதிர்கொள்ளலாம்.

அதற்கு பதிலாக, போஸ்டர் அடித்து ஒட்டுவது, போராடும் மனநிலைக்கு வருவது என்பது எந்த அளவுக்கு ஒருவரின் கருத்துகளுக்கு மரியாதை கொடுக்கிற பண்பு அவர்களிடம் உள்ளது என்பதை காட்டுகிறது. ஒரு ஜனநாயக ரீதியாக இயங்கும் இந்த நாட்டில் அவர்கள் தங்களுடைய தரத்தை குறைத்துக்கொண்டு தெருச்சண்டை போன்று தகுதியை குறைத்துக்கொள்கிறார்கள்.

கவர்னர் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிட்டிருப்பது குறித்து நீங்கள் கேட்டால், தமிழக கவர்னர் என்று மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா? மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில், ‘தலை நிமிர்கிறது தமிழகம்’ என்றெல்லாம் சொல்லவில்லையா? தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமான வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா?.

தமிழகத்தில், பால் விலை மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கு மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளன. அந்த பிரச்சனைகளை திசைதிருப்பும் விதமாக தற்போது இந்தப் பிரச்சினையை கிளப்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.