ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரும் வன்முறை – நாளை ராஜ்பவன் முற்றுகை போராட்டம்..!

சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டங்கள் நாளை முதல் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தன்னிச்சையாகவும் சில பகுதிகளை விட்டுவிட்டும் வாசித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனைக் கண்டித்து ஆளுநர் ரவி முன்பாகவே கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். அத்தீர்மானத்தில், , எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும்,அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சட்டசபையை விட்டு ஆளுநர் திடீரென வெளியேறினார். இந்தியாவில் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மை எரிப்பு போராட்டங்களும் நடத்தப்பட்டன. திமுக, பெரியார் திக, திராவிடர் விடுதலை கழகம் என பல்வேறு அமைப்பினர் இந்தப் போராட்டங்களை நடத்தினர். புதுச்சேரியிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கட்சியினரும் போராட்டங்களில் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை உச்சரிக்க மறுத்த ஆளுநர் ரவியைக் கண்டித்து நாளை ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அனைத்து நாடார் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகளும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளனர்.