ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி..!

டந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை நன்கொடையாக பெற்றது.

இந்த நிதியை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் ரூ. 11.04 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடுக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்த்திக் சிதம்பரத்தின் மூன்று அசையாத சொத்துக்கள் மற்றும் ஒரு அசையும் சொத்தை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் இந்த சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.