கடற்கரையில் மீன் விற்க கூடாது.. ஆனால் கடலுக்குள் பேனா மட்டும் வைக்கலாமா..? சீமான் ஆவேச பேச்சு..!

டற்கரையில் மீன் விற்கக் கூடாது என்று தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் வரை உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12 ஆம் தேதி கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மீனவர்களின் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீனவ மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘மீனவர்கள் மீன் விற்கும் இந்தச் சாலையைப் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்காகத்தான் என தெரிவித்து அரசு இதைக் கையகப்படுத்திக்கொண்டது. இந்தச் சாலையில், மீன்கடை வைத்திருப்பவர்கள் கட்டடமோ, தகரக் கொட்டகையோ அமைத்துக்கொண்டு இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. பெரிய குடையை வைத்துக்கொண்டு, இல்லனா சின்ன தார்பாய் கட்டி, அந்த நிழலில் அமர்ந்து கூறு கட்டி மீன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கடல் பக்கத்தில் இருக்கு, படகு இங்கே வந்து கரை சேருது, இந்தப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கி வந்து இங்கு விற்கிறார்கள். இதைக் காலிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

நாங்கள் கடற்கரையோரத்தில் மீன் விற்கக் கூடதாம். ஆனால், கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்கலாமா… இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா… கடற்கரையில் நான் சந்தைபோட்டு மீன் விற்க கூடாது, ஆனால் நீங்கள் கடற்கரையில் மிகப்பெரிய சமாதி கட்டி எல்லாரையும் புதைக்கலாமா? சமாதி கட்டுவதில் காட்டும் ஆர்வம் மீன் சந்தையைக் கட்டுவதில் இல்லையே?

நீங்கள் மீன் சந்தை கட்டித்தரும் வரை நாங்கள் மீன்களை விற்கக் கூடாதா… கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்று தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது.

எங்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. எங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தூரமான இடத்தில் நீங்கள் மீன் சந்தையைக் கட்டித் தருகிறீர்கள் என்றால், இங்கே இருந்து அந்தச் சந்தைக்கு மீன்களைத் தூக்கிக்கொண்டு போய் விற்று வருவதற்கான தூக்குக் கூலியே எங்களின் உழைப்பை எடுத்துவிடுமே… அதற்கு அரசிடம் பதில் இருக்காது.

வட இந்திய தொழிலாளர்கள் பிழைப்புக்காக இங்கே வந்தப்போது, ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம், என் மக்கள் பிழைப்புக்காக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக பேசமாட்டேங்கிறார்கள்’ என்று கூறினார்.