ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் தப்பி ஓட முயற்சி – கால் எலும்பு முறிவு..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் . இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்று முன்தினம் 7 மணிக்கு வீட்டில் செந்தில் குமார் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்தது .அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டியது. செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு மோகன்ராஜ் அங்கு ஒடி வந்து காப்பாற்ற முயன்றார். அதற்குள் அந்த கும்பல் செந்தில் குமாரையும் வெட்டி சாய்த்தது. கொலையை தடுக்க முயன்ற மோகன் ராஜையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்தது. மோகன் ராஜின் சத்தம் கேட்டு அவரது தாயார் புஷ்பவதி , அவரது அக்கா ரத்தினாம்பாள் ஓடி வந்தனர். அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் சரமாரியாகவெட்டியது. இதனால் அவர்கள் 2 பேரும் அதே இடத்தில் இறந்தனர். கொலையில் ஈடுபட்ட கும்பல் வெறியுடன் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி வீசியது. அந்த தெரு முழுவதும் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இது பற்றி தகவல் அறிந்ததம் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பவானீஸ்வரி, கோவை சரக டி.ஐ.ஜி. சரவணா சுந்தர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி இறந்தவர்களின் உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்குவேன் வைத்திருந்தார். அதன் டிரைவராக பணியாற்றி ஒருவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை செந்தில்குமார் வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் செந்தில்குமார் வீட்டிற்கு செல்லும் வழி பாதையில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் செந்தில்குமார் வேறுபகுதி சென்று மது அருந்துமாறு கூறினார். இந்த நிலையில் அந்த டிரைவரும் அவரது நண்பர்கள் 2 பேரும் செந்தில் குமார் வீட்டிற்கு செல்லும் வழி பாதையில் அமர்ந்து மது குடித்தனர். இதை பார்த்து செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமார், மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினம்மாள் ஆகியோரை கொடூரமாக கொலை செய்து விட்டு 3 பேரும் தப்பிச் சென்று விட்டனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேடப்பட்டு வந்த திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.கொலைக்கு பயன்படுத்தி கத்திகளை எடுத்து தருவதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது செல்லமுத்து மாடியில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார்.அப்போது அவர் காலில் எலும்பு முறிந்தது.இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்..