பண்ணாரி அம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலியுடன் கட்டணமில்லா திருமணம்..!

சத்தியமங்கலம்: 2023- 2024ம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற  அறிவிப்பு எண் 35- ல்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மண மக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின்  அவர்களுக்கு புத்தாடைகளுடன்  கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்  இத் திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாற்றுத்திறனாளி  மணமக்களுக்கு  பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையத்தை சேர்ந்த மணமகன் ஆர்.இனியவன் மணமகள் எம்.நீலாமணி மணமக்களுக்கு 4 கிராம் பொன் தாலி,  பட்டுபுடவை, பட்டு ரவிக்கை, பட்டு சட்டை, பட்டு வேஷ்டி, பட்டு துண்டு ஆகிய புத்தாடைகள் திருக்கோயில் சார்பில் வழங்கப்பட்டது. திருமணத்திற்கு கட்டணம் எதுவும் இல்லாமல் இலவசமாக நடத்தி வைக்கப்பட்டது. இத்திருமண விழாவில் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் மேனகா,  பரம்பரை அறங்காவலர்கள் வீ.புருஷோத்தமன, அமுதா மற்றும் மண மக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்..