கோவை – ஜபல்பூா் சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு..!!

கோவையில் இருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை – ஜபல்பூா் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை – ஜபல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் ( எண்: 02197) அக்டோபர் 10-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.
இதேபோல, அக்டோபர் 7-ம் தேதி முதல் டிசம்பா் 30-ம் தேதி வரை ஜபல்பூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, பலக்காடு, ஷோரனூா், மங்களூரு, இட்டாரசி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.