முதலைமைச்சர் கோப்பை அறிமுகம்: நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே எனது இலக்கு – அமைச்சர் உதயநிதி பேச்சு..!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் மூன்று இலட்சத்து எழுபது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான டிராபியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு என்று கூறினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் நாளை ஜுலை 01ஆம் தேதி முதல் ஜுலை மாதம் 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவைகளில் 2000க்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மூன்று வேளை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர் வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இடங்களிலும் மருத்துவ வசதி ஏற்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி அசோக் நகர், மெரினா கடற்கரை, குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, போரூர் எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆகிய இடங்களிலும், பேட்மிண்டன் போட்டி, சிலம்பம், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளி விளையாட்டுகள் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும், நீச்சல் போட்டி வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்திலும், டென்னிஸ் நுங்கம்பாக்கத்திலும், ஆக்கி போட்டியாஅது ராமச்சந்திரா பல்கலைக்கழகத்திலும், பீச் வாலிபால் மெரினா கடற்கரையிலும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.