இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்- ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்.!

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நேற்றிரவு 7.23 மணியளவில் ஆளுநர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் திடீர் திருப்பமாக தனது உத்தரவை ஆளுநர் நிறுத்திவைத்தார். அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் இரவு 11.50 மணியளவில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆளுநரின் கடிதத்தில் உள்ள தகவல்கள் வெளியாகின. அதில், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின்படி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டுள்ளேன். என்னிடம் இருந்து அடுத்த தகவல் வரும் வரை செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்..