ஜூலையில் விண்ணில் ஏவப்படும் ‘சந்திரயான்-3’… இஸ்ரோ தகவல்..!

ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது.

இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III என அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலத்தி சோதனை பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 2,232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், நிலவுக்கான இந்தியாவின் 3-வது விண்கலம் ஏவும் திட்டம் வருகிற ஜூலையில் நடைபெறும். அதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, பாடம் மிக எளிமையானது. கடந்த காலத்தில் இருந்து கற்று கொண்டு, உங்களது திறமைக்கு எது சாத்தியமோ அதனை செய்ய வேண்டும். தோல்விகள் நேரலாம் என கூறியுள்ளார். ஒரு ராக்கெட் திட்டம் தோல்வியடைய ஆயிரம் காரணங்கள் உள்ளன. இன்று கூட, இந்த திட்டம் தோல்வியடைந்து இருக்க கூடும். ஆனால், தேவையானவற்றை செய்து முடிப்பதற்காக நாங்கள் இருந்தோம் என கூறியுள்ளார்.

இஸ்ரோ அமைப்பின் சந்திரயான்-3 திட்ட நடவடிக்கையின்படி, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக மற்றும் மென்மையாக தரையிறங்குவது, சந்திரனில் ரோவரை வலம் வர செய்வது மற்றும் அறிவியல் பரிசோதனைகளை நடத்துவது ஆகிய 3 பணிகள் நடைபெற உள்ளன