கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: நீலகிரியில் இறைச்சி வாகனங்களுக்கு தடை- கூடலூர், பந்தலூர் பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு..!

ஊட்டி: கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர். இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கூடலூர் பகுதியில் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதுதவிர வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் லவ் பேர்ட்ஸ் போன்ற பறவை இனங்களை எடுத்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.