உளவுத்துறையின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி- ஹைகோர்ட் உத்தரவு..!!

ர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாகப் பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்கு தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை.

பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே பேரணிக்குத் தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும். நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் உயர்நீதிமன்றத்தினை நாடியது. இதன்பின் தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையே தமிழகத்தில் தற்போதைக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட, பேரணியை அடுத்த மாதம் நவம்பர் 6ம் தேதி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த நிமிடமே பாயும் என்ற எச்சரிக்கையும் நீதிபதி இளந்திரையன் வழங்கினார்.

இதன்பின்பு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அனுமதியளிக்க மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு, ‘கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் தான் அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையினை காரணம் காட்டி காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்ப நினைக்கிறது’ என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இதற்கு காவல் துறையினர் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில், ‘நீதிமன்ற உத்தரவின் பின் சூழல் வேறுவிதமாக மாறியுள்ளது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதாக இருந்தால் அனுமதி கொடுக்கலாம். 24 இடங்களில் அனுமதி கொடுக்க முடியாது. நவம்பர் 6ல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை சந்தேகம் எனவும் யூகம் என்றும் சொல்வது சரியில்லை’ என்று காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உளவுத்துறையின் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறையின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.