ஆளுநருக்கு எதிராக குடியரசு தலைவரிடம் முறையிட திமுக முடிவு… அவசர அவசரமாக டெல்லி பறக்கும் ரவி…

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி திமுக அரசுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி தொடர்ச்சியாக வைத்து வரும் சில கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஆளுநர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் இவர் பாஜக ஏஜென்ட் போல செயல்படுகிறார். அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து உள்ளன.

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் டெல்லியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கோவை கார் வெடிப்பை என்ஐஏ விசாரிக்கும் நிலையில் இவரின் பயணம் கவனம் பெறுகிறது .

சமீபத்தில் கோவை கார் வெடிப்பு என்ஐஏ விசாரணைக்கு தாமதமாக பரிந்துரை செய்யப்பட்டதை ஆளுநர் ரவி விமர்சனம் செய்து இருந்தார். அவரின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆளுநர் ஒருவர் இப்படி தனது அதிகாரத்தை மீறி, கட்சித் தலைவர் போல செயல்படுவதாக திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் இந்த பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக சார்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிடப்பட உள்ளது. திமுக சார்பாக இதற்காக கூட்டணி கட்சிகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இன்றுதான் இந்த கையழுத்துக்களை பெறுவதற்கான கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு செல்கிறார்.

முன்னதாக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொலவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ரு தாகமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதுபற்றி கவலைப்படவுமில்லை, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.