சவாலான அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனுக்கு துணை மூக்கு அகற்றம் – மீனாட்சி மருத்துவமனையில் அசத்தல்..!

தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் மிகவும் சவாலான அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனின் துணை மூக்கை வெற்றிகரமாக அகற்றினர்.
பிரதீப் என்ற 10 வயது சிறுவனுக்கு பிறந்ததில் இருந்தே தலையின் வலது முன் பகுதியில் வீக்கம் இருந்தது, மேலும் சளி வெளியேற்றத்தால் அவதிப்பட்டு வந்தான். இதனால் பல ஆண்டுகளாக போராடி வந்த பிரதீப்பிற்கு இந்த மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் என்.அருண்குமார் பரிசோதனை செய்தார். இதில், அச்சிறுவன் முகத்தின் வலது முன் பகுதியில் ‘புரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ்’ இருப்பது கண்டறியப்பட்டது.
“இதையடுத்து, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மீனாட்சி மருத்துவமனையில் சிறுவனுக்கு  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கு அகற்றப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அருண்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ்’ என்பது ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு நிகழக்கூடிய மிக அரிதான பாதிப்பு. பெரும்பாலும் முகத்தின் மையக்கோட்டு பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படும். மிக அரிதான நோ்வுகளில் மையக்கோட்டுக்கு அடுத்து இப்பாதிப்பு இருக்கக்கூடும். இந்தச் சிறுவனுக்கு முகத்தின் ‘பாஸிஃபிரண்ட்டல்’ என்ற பகுதியோடு இணைந்திருந்தது. இதை முழுமையாக வெட்டி அகற்றுவதற்காக மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை 3 மணிநேரம் செய்யப்பட்டது. முழுவதும் குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் தற்போது மற்றவா்களைப்போல இயல்பாக இருக்கிறாா் என்றாா் அருண்குமாா்.
அப்போது, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவா் காந்திராஜ், மயக்கவியல் துறைத் தலைவா் ஹரிமாணிக்கம், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் ஐசக் ரிச்சா்ட்ஸ், மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பிரவீன், அறுவை சிகிச்சை பொது மேலாளா் பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்..