பிரதமர் மோடி சொன்ன மகிழ்ச்சி செய்தி… கரகோஷத்தால் அதிர்ந்த ரொனல்டு ரீகன் அரங்கம்..!

வாஷிங்டன் : பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை பேசினார்.

அப்போது அவர் கூறும் போது, “இந்தியாவோட ஒவ்வொரு சாதனையிலும் நீங்கள் சந்தோஷப்படுறீங்க.. உலகின் பல நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் யோகாவிற்காக ஒன்னுகூடுவதை பார்த்து நீங்கள் மிகவும் பெருமைப்படுறீங்க.. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் மேட் இன் இந்தியா அப்படின்ற பெயரை பார்க்கும்போது நீங்கள் பெருமைப்படுறீங்க.. இதை எல்லாம் இந்தியராக நீங்க பெருமையாக உணருறீங்க.. இந்தியாவின் அதீத திறமைசாலிகள் இங்குள்ள அமெரிக்க நிறுவனங்களை வழிநடத்துவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கு.. உலகம் முழுவதும் ‘நாட்டு நாடு…” இசைக்கு நடனமாடுவதை பார்க்கும் போது இந்தியர்களுக்கு பெருமையாக இருக்கு..

இந்தியாவின் இந்த அபரிமிதமான முன்னேற்றத்திற்குக் காரணம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நம்பிக்கை தான் காரணம். இந்த மோடி தனியாக எதையும் செய்யவில்லை. மக்கள் தான் காரணம்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய டிஜிட்டல் புரட்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் உங்களுடைய (இந்தியர்கள்) கிராமத்தில் போய் பார்த்தாலும், ஒரு கடையில் கியூஆர் கோடு போர்டை பார்த்திருப்பீர்கள்.. அதிலேயே நீங்கள் பணமாக செலுத்தலாம். உங்களிடம் யுபிஐ இருக்கிறதா என்று கடைக்காரர் கேட்பார். உங்கள் தொலைபேசியில் இருந்தே பணத்தை செலுத்தக்கூடிய ஆப் ஆகும். இந்த புதிய இந்தியா நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்று இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாரத்தின் ஏழு நாட்களும் , 24 மணி நேரமும வங்கிச் சேவையை பெறலாம். அது ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை அப்படின்னு எதுவம் இல்லை.

இந்தியாவில் நீங்கள் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் ஆகும். இந்தியாவில் கூகுளின் AI ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்கிறது. இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்.

நம்மிடம் இருந்து திருடப்பட்ட 100க்கும் மேற்பட்ட இந்தியாவின் பழங்கால பொக்கிஷமான பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பார்ட்னர்ஷ் இந்த நூற்றாண்டில் உலகையே சிறப்பாக மாற்றும். இந்த பார்ட்னர்ஷிப்பில் இந்தியர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் முக்கிய பங்கு இருக்க போகிறது. நான் இங்கிருந்து நேராக விமான நிலையத்திற்கு புறப்படுகிறேன், உங்கள் அனைவரையும் சந்திப்பது உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவது போல் இனிமையாக உள்ளது” என்று கூறினார்.